Wednesday, July 17, 2013

பேராசிரியர் நெடுஞ்செழியனுக்கு திருச்சியில் த.க.இ.பே. பாராட்டு விழா!

கர்நாடக் காவல்துறை தொடுத்த பொய் வழக்கை உடைத்து சிறை மீண்ட ‘தமிழ்த்தேசப் புகழொளி, பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கும், சிறைமீட்ட மூத்த வழக்கறிஞர் திரு.சு.க.மணி அவர்களுக்கும் பாராட்டு விழா  , திருச்சியில் 17.07.2013 புதன் கிழமை மாலை 5.00மணி, புத்தூர் நால்ரோடு அருகில் வெல்லாளியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமைப் பேரவை ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமை தாங்கினார்.

தமிழ்க்கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் தோழர் நா.இராசரகுநாதன் வரவேற்புரையாற்றினார்.

திருச்சி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ‘தமிழ்த் தேசச் செம்மல் தோழர் வீ.ச.சோ, உலகத் தமிழர் பேரமைப்பு திரு ம.பொன்னிறைவன், பேராசிரியர் இரா.சக்குபாய், அருள்தந்தை சேவியர் ஆரோக்கியசாமி, திருக்குறள் கல்வி மையம் திருக்குறள் சு.முருகானந்தம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் க.நெடுஞ்செழியன், மூத்த வழக்கறிஞர் சு.க.மணி ஆகியோரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் இரா.நல்லகண்ணு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பாராட்டிச் சிறப்புரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர் சா.செல்வக்குமார் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில், திரளான தமிழ் உணர்வாளர்கள் திரளானோர் பங்கேற்றனர். 














(செய்தி : த.க.இ.பே செய்திப் பிரிவு, படங்கள் : செல்வகுமார்)

யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புத்தக திருவிழா ரத்து செய்யப்பட்டதை த.க.இ.பே. வரவேற்கிறது!

“யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புத்தக திருவிழா ரத்து செய்யப்பட்டது”
பதிப்பாளர்களுக்கு  பபாசி கடிதம்!
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை வரவேற்பு!

இலங்கை யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப்புத்தக திருவிழா நடத்த போவதில்லை என்று தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) பதிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில்,  “மாண்புமிகு தமிழக முதல்வர்கள் ஈழத்தமிழர்களின் நலன் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். மேலும் ஈழத்தமிழர் நலனில் அக்கறையும் பற்றும் கொண்ட பலரும் நமது அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட நாமும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புத்தக் காட்சியை நடத்துவதை தவிர்க்கிறோம் என்றும், அது குறித்த 23.7.2013 ஆலோசனைக் கூட்டத்தையும் தவிர்ப்பதாகவும் அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழ்க் கலை இலக்கியப்பேரவை சார்பில் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) “யாழ்ப்பாணத்திற்கு புத்தகக் கண்காட்சி நடத்தச் செல்லக்கூடாது” என்று வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டது. அறிக்கையை வரவேற்று  தமிழின உணர்வாளர்கள் இணையதளங்களில் கடிதங்கள், கருத்துகள் எழுதினார்கள்.

இந்நிலையில் பபாசி “புத்தகக் கண்காட்சி நடத்துவதை ரத்து’’ செய்ததை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை வரவேற்கிறது. பாராட்டுகிறது.
                                                                     இண்ணனம்,
கவிபாஸ்கர்
செயலாளர், ...பே
நாள்: 17.7.2013

இடம்: சென்னை

Monday, July 8, 2013

இனக்கொலையாளி இராசபட்சே ஆட்சி நடத்தும் யாழ்ப்பாணத்தில்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI)
 தமிழ் புத்தகத் திருவிழா நடத்தக்கூடாது

தமிழ்க் கலை இலக்கியப்பேரவை வேண்டுகோள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) சார்பில் வருகின்ற செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையில் புத்தகக் கண்காட்சி நடத்த விருப்பதாக புத்தகப் பதிப்பாளர்களுக்கு, அதாவது பப்பாசியில் உறுப்பினர்களாக உறுப்புவகிக்கும் அனைத்து பதிப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  

அக்கடிதத்தில் “இலங்கை யாழ்ப்பாண நகரில் தமிழ் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என்று, யாழ்ப்பாண தமிழர்கள் கேட்டுக் கொண்டதாகவும், யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம், யாழ்ப்பாணம் மாநகராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியோர் முழு ஒத்துழைப்பு தருவாதகவும்,”  அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது குறித்து விவாதித்து முடிவு எடுக்க சிறப்புக்கூட்டமாக பப்பாசியின் சார்பில் வருகிற 27.7.2013 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு  சென்னை தியாகராயர் நகர், ஸ்ரீபாலாஜி திருமண அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-2009 இல்  இந்தியா உள்ளிட்ட பலநாடுகளின் ஆதரவோடு ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த மனித குலப்பகைவன் இராசபட்சே கும்பலுக்கு எதிராக தமிழகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் என தொடர்ந்து இலங்கைக்கு எதிரான கண்டனங்களையும், போராட்டங்களையும் நடத்திவரும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இலங்கைக்குச் சென்று புத்தகக் கண்காட்சி நடத்தச் செல்வது கண்டனத்திற்குரியது.
ஒரு சமூகத்தை ஒவ்வொரு தளத்திலிருந்தும் அடுத்தத் தளத்திற்கு உந்தித்தள்ளும் வலிமை மிக்கவை  அறிவு ஆயுதங்கள் புத்தகங்கள். ”ஒரு நூலகம் திறக்கப்பட்டால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்” என்பது நம் முன்னோர்களின் கூற்று. அறிவையும் ஆற்றலையும் அள்ளி வழங்கும் தாய்க்கு ஈடானவை நூலகங்கள். அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த,  பல இலட்சம் நூல்கள் தாங்கிய யாழ் நூலகத்தை 1981 இல் சிங்களப் பேரினவாதம் எரித்துச் சாம்பலாக்கியது.
தமிழர்கள் அனைவரும் சுயமாக சிந்திக்கும் உரிமை மீதும், அறிவைத் தேடும் மானுட இயல்பு மீதும் எறியப்பட்ட கொள்ளி என்றே அதை கருதவேண்டும். ஆற்றல் உள்ள இனமாக  இல்லாது செய்துவிட்டால் தொடர்ந்து  அடிமைகளாகவே வைத்திருக்கலாம் என்ற முடிவுகளோடுதான்  சிங்கள இனவெறி அரசு யாழ் நூலகத்தைத் தீயிட்டது.
தமிழர்களின் அறிவு தளத்தை தரைமட்டமாக்கத் துடிக்கும் சிங்கள இனவெறியர் களுக்கு, அவர்களின் அழைப்பின் பேரில், அறிவை புகட்டும் பணியை செய்யும் தமிழகப்பதிப்பாளர்கள் இலங்கைக்கு புத்தகக்கண் காட்சி நடத்த செல்வது வேதனைக் குரியதாகும்.
தமிழக அரசு, இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கவும்,  இலங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஆசிய தடகளப்போட்டியை தமிழகத்தில் நடத்த முடியாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தென்னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர்கள் (பப்பாசி) இலங்கைக்கு புத்தகக் கண்காட்சி நடத்த செல்லக்கூடாது. அதை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என தமிழ்க்கலை இலக்கியப் பேரவையின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இது குறித்து முடிவு எடுக்கும் ஆலோசனைக் கூட்டத்திலும், புத்தகக் கண்காட்சி நடத்த இலங்கைக்கு செல்லக்கூடாது” என்றே தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக்கெள்கிறேன்.

கவிபாஸ்கர்
செயலாளர்,

த.க.இ.பே.

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு பாராட்டு விழா!


பொய் வழக்குகளிலிருந்து சிறை மீண்ட
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு
த.க.இ.பே. சார்பில் பாராட்டு விழா!

தமிழின விரோத கர்நாடக அரசின் காவல்துறை தொடுத்த பொய் வழக்குகளை உடைத்து சிறை மீண்டிருக்கும், தமிழறிஞரும், தமிழிய ஆய்வாளருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவை  - மக்கள் உரிமைப் பேரவை அமைப்புகளின் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகின்றது.

வரும் 17.07.2013 அறிவன்(புதன்) கிழமையன்று மாலை 5 மணியளவில், திருச்சி புத்தூர் நால்ரோடு அருகிலுள்ள வெக்காளியம்மன் திருமண மண்டபத்தில் இப்பாராட்டு விழா நடைபெறுகின்றது. 

நிகழ்வுக்கு, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி அவர்கள் தலைமையேற்கிறார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் கவிஞர் நா.இராசாரகுநாதன் வரவேற்புரையாற்றுகிறார். திருச்சி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு அமைப்பாளர் 'தமிழ்த் தேசச் செம்மல்' தோழர் வீ.ந.சோ., உலகத் தமிழர் பேரமைப்பு திரு. ம.பொன்னிறைவன், பேராசிரியர் இரா.சக்குபாய், அருள்தந்தை சேவியர் ஆரோக்கியசாமி, திருக்குறள் கல்வி மையம் திரு. சு.முருகானந்தம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். 

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களும், பேராசிரியரை சிறை மீட்ட மூத்த வழக்கறிஞர் திரு. சு.க.மணி அவர்களும் பாராட்டு பெறுகின்றனர். 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் இரா.நல்லகண்ணு ஆகியோர் பாராட்டிச் சிறப்புரையாற்றுகின்றனர். 

நிறைவில், தோழர் சா.செல்வக்குமார்(த.தே.பொ.க.) நன்றி கூறுகிறார். 

தொடர்புக்கு: 9443122860, 9842446044


Monday, July 1, 2013

“கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்கள் பக்கம் இருக்க வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு!

கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்கள் பக்கம் இருக்க வேண்டும்
இயக்குநர் மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!
 “கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்கள் பக்கம் இருக்க வேண்டும்” என இயக்குநர் மணிவண்ணன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசினார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் தமிழ்த் தேசியப் பற்றாளர் இயக்குநர் தோழர் மணிவண்ணன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 29.6.2013 அன்று மாலை சென்னைவடபழனியிலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர்வெ.சேகர்ஓவியர் கு.புகழேந்திஇயக்குநர் .கெளதமன்இயக்குநர் .செந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசிய உணர்ச்சிப்பாவலர் கவிஞர் காசி ஆனந்தன்இயக்குநர் மணிவண்ணன்அவர்களது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

முன்னதாகதமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழக அமைப்பாளர் தோழர் உதயன் வரவேற்புரையாற்றிய பின், இயக்குநர் மணிவண்ணன் அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை உள்ளடக்கி கவிஞர் கவிபாஸ்கர் எழுதிய குறுநூல் வெளியிடப்பட்டது. நூலை தோழர் பெ.மணியரசன் வெளியிட, இயக்குநர் மணிவண்ணன் அவர்களது மகன் திரு. இரகுவண்ணன், மகள் திருமதி ஜோதி ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்வைத்தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில், தலைமையுரையாற்றிய தோழர் பெ.மணியரசன் பேசியதாவது:

“தமிழ்த் தேசியப் பற்றாளரும் இயக்குநருமான தோழர் மணிவண்ணன் அவர்களது இறப்பைப் பற்றி பேசும் துர்பாக்கிய நிலையில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஒரு குறுநூலாக்கி இங்கு வெளியிட்டுள்ளார் கவிஞர் கவிபாஸ்கர். இயக்குநர் செந்தமிழன் நம் சமகால ஆளுமைகளை நாம் ஆவணப்படுத்த வேண்டும் என்று பேசினார். அப்பணியை இந்நிகழ்வை முன்னிட்டு கவிஞர் கவிபாஸ்கர் செய்துள்ளார்.

கலைத்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட துறை என்று இங்கு சிலர் பேசி வருகின்றனர். அது உண்மையல்ல. பணம் சம்பாதித்துக் குவிப்பதே தமது இலட்சியம் என்று செயல்படுகின்ற சிலர், தான் சார்ந்துள்ள இனத்துக்கு, தேசத்துக்கு எதையும் செய்ய விரும்பாத நிலையில், அந்த போலித்தனத்தை மறைப்பதற்காக ‘கலைத்துறையில் அரசியல் கூடாது’ என்று பேசுகின்றனர். அந்த போலித்தனத்தைத் திரை கிழித்தவர் இயக்குநர் மணிவண்ணன் ஆவார்.

கலைப்படைப்பாளிகள் தான் ஒடுக்குமுறைக்கு எதிராக, கொடுமைகளுக்கு எதிராக கொதித்து எழக்கூடிய சமூகப்பணியை முன்னின்று செய்ய வேண்டியவர்கள். புகழ் பெற்ற கலைஞரான சார்லி சாப்ளின், ஹிட்லரின் பாசிசத்தை எதிர்த்து, அதை அம்பலப்படுத்தி ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்றொரு படத்தை தந்தார். முதலாளியத் தொழில் வளர்ச்சி மனிதர்களை இயந்திரமயமாக்குகின்றது என்பதை அம்பலப்படுத்தி ‘தி மார்டன் டைம்ஸ்’ என்றொரு கலைப் படைப்பைத் தந்தார். நடுநிலை என்று நாடகமாடாமல், பாசிச எதிர்ப்பின் பக்கம் உறுதியாக நின்றார் சார்லி சாப்ளின்.

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து நாடு தனியாகப் பிரிய 2014ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. அந்த வாக்கெடுப்பு குறித்த செய்தி வரும்போதெல்லாம், புகழ்பெற்ற “ஜேம்ஸ் பாண்ட்” பட நடிகர் சீன் கானரி, அந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்க வருவாரா என்று தனியே செய்தி வெளியிடுவார்கள். ஸ்காட்லாந்து நாட்டுக்காரரான சீன் கானரி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஸ்காட்லாந்து நாடு எப்போது விடுதலை பெற்றுத் தனிநாடாக மலர்கிறதோ அப்போது தான் நான் தாய்நாடு திரும்புவேன் என்று அறிவித்து அவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

இப்படி உலகெங்கும் கலைப் படைப்பாளிகள் சமூக உணர்வோடு, தான் சார்ந்துள்ள தேசத்தின், இனத்தின் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இது போன்ற நிலை இன்னும் பெரிய அளவில் வரவில்லை.

தமிழ்நாட்டில் கொள்கை, இலட்சியம் எதுவுமில்லாமல் திரைத்துறையில் பெற்ற பிரபலத்தை வைத்து யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தேர்தல்களில் பங்கெடுக்கலாம். ஆனால், அவர்கள் இலட்சிய அரசியல் மட்டும் செய்யக்கூடாதென்பர். இயக்குநர் மணிவண்ணன் அவர்கள், மக்களுக்கான இலட்சியத்தை முன் வைத்து நின்றவர். மனித சமத்துவம், ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக அமைப்பு ஆகிய இலட்சியங்களுக்காக நம்மோடு நின்றவர். இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக, தமிழ்நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது என அவர் மனம் கொதித்தது. சிங்கள இனவெறியர்கள் தமிழீழத்தை ஆக்கிரமித்து, இனப்படுகொலை செய்ததை எதிர்த்து அவர் மனம் கொதித்தது.

இங்கு பேசிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள், ஒருவன் முற்போக்கானவன் என்றால் அவன் சார்ந்துள்ள இனம், தேசம் அடிமைப்பட்டுக் கிடப்பதை எதிர்த்து அவன் குரல் கொடுக்க வேண்டும் என்றார். அது உண்மையே! அவரவர் சார்ந்துள்ள இனத்தின் விடுதலையை, தேசத்தின் விடுதலையை எவர் ஆதரிக்கின்றாரோ, அதுவே அவரது சமூக உணர்வின் அடிப்படையாகும். முற்போக்கானவர் என்பதற்கான முதற்படியாகும்.

அதன்வழியாகத் தான் சமூக சமத்துவத்திற்கான மார்க்சியக் கருத்தை ஏற்க முடியும். மார்க்சியம், பெரியாரியம் எதுவானாலும் தமிழ்நாட்டின் இன்றையத் தேவைக்கு – அவற்றிலிருந்து எவற்றை எடுத்துக் கொள்ளலாமோ அவற்றை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்காகத் தத்துவமே தவிர, தத்துவத்திற்காக மக்கள் அல்ல.

தமிழீழம் மட்டுமின்றி, இந்திய ஏகாதிபத்தியத்திடமிருந்து தமிழ்நாடு விடுதலையடைவதையும் இயக்குநர் மணிவண்ணன் ஆதரித்தார். அதற்காக நம்முடன் இணைந்தும் இயங்கினார். கடவுள் மறுப்புக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ‘கடவுள்’ என்றொரு படத்தைப் பற்றி இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் அடிக்கடி என்னிடம் சிலோகித்துப் பேசியிருக்கிறார். மனம் ஒவ்வாத பாத்திரத்தை சில நேரங்களில் செய்ய வேண்டியிருக்கிறது என்று கூறிய அவர், கடவுள் படத்தில் நடித்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரது இயக்கத்தில் வெளியான ‘இனி ஒரு சுதந்திரம்’ என்ற படம் என்னை மிகவும் கவர்ந்த படைப்பாகும். அவரது குடும்பத்திலும் அவர் சமூகம் சார்ந்த கருத்துகளைப் பேசினார். 

2008ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக இயக்குநர் சீமானும், தோழர் கொளத்தூர் மணியும், நானும் கைது செய்யப்பட்டோம். அப்போது, மாவட்ட நீதிமன்றம் பிணை மறுத்துவிட, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அடிக்கடி கோவை சிறைக்கு வந்து சந்தித்தார் மணிவண்ணன். எங்களைப் பிணையில் கொணரப் பெரும்பாடுபட்டார்.

அதன்பிறகு, இயக்குநர் சீமானை மட்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்த போது, அதனை எதிர்த்து நாங்கள் இயக்கம் நடத்தினோம். அதற்கு நிதியுதவி செய்து அதற்காக பாடுபட்டவர் இயக்குநர் மணிவண்ணன். எங்களது தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் வளர்ச்சியிலும் அக்கறையுடன் பங்கெடுத்து அவ்வப்போது நிதியுதவிகள் செய்தார்.

இயக்குநர் மணிவண்ணன் என்னிடம் அடிக்கடி, எப்படி கம்யூனிஸ்டாக இருந்து கொண்டு இங்கிருப்பவர்கள் இனவிடுதலையை எதிர்க்கின்றனர் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மையான கம்யூனிஸ்ட்டுகள், தேச விடுதலையின் பக்கம், இன விடுதலையின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஆனால், இங்கிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவரது ஆதங்கம்.

1970களில் நானும் அவர்களோடு(சி.பி.எம்.) இயக்கத்தில் அங்கமாக இருந்த போது, இதே வீதிகளில் ‘வியத்நாம் யுத்தம் எங்கள் யுத்தம் வியத்நாம் இரத்தம் எங்கள் இரத்தம்’ என முழக்கம் எழுப்பினோம். அது தவறில்லை. வங்க தேசத்தை விடுவிக்க இந்திய இராணுவம் கொண்டு போரிட்ட போது, அதை அவர்கள் வரவேற்றனர். அது தவறில்லை. ஆனால், தமிழீழ விடுதலை என்று வரும்போது, இன்னொரு நாடான இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சினைக்கு நாம் போராடலாமா என்று கேட்கின்றனர். ஈழ யுத்தம் எங்கள் யுத்தம் ஈழ இரத்தம் எங்கள் இரத்தம் என்று நாம் முழக்கமிட்டால் அந்த இடதுசாரிகளின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் அலறுகிறார்கள். இதற்குப் பெயர் கம்யூனிசமா அல்லது பார்ப்பனியமா? பார்ப்பனியம் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நீதி சொல்லும். அதை கம்யூனிசத்தின் பேரில் இவர்கள் செய்கிறார்கள்.

புரட்சியாளர் லெனின், ஒவ்வொரு கருத்துக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் இருக்கிறது என்றார். பின்னாளில், மாவோ ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் முத்திரை இருக்கிறது என்று சொன்னார். அதை நாம், இந்திய சூழலில், இங்கு ஒவ்வொரு கருத்துக்குப் பின்னாலும் வர்ணாசிர தர்ம முத்திரை இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அதற்கேற்பவே, கம்யூனிஸ்ட்டுகள் என சொல்லிக் கொண்டு இங்கு இனவிடுதலையை எதிர்த்து, இனத்துரோகம் புரிந்து கொண்டுள்ளனர். தேச விடுதலையை ஏற்காத அவர்கள், உண்மையில் கம்யூனிஸ்ட்டுகளே அல்ல.

கர்நாடகத்தில் ஒவ்வொரு முறையும் புதிய முதல்வர்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள கலைப் படைப்பாளிகளை, கன்னட மொழி அறிஞர்களைச் சந்தித்து ஆசி பெறுகின்றனர். பொதுவான கலைப் படைப்பாளிகளாக அங்கு பலர் இன உணர்வுடன் இருக்கின்றனர். தமிழகத்தில் அவ்வாறான நிலைமை இல்லை. அப்படியொரு பொதுவான தமிழ் உணர்வுமிக்கப் படைப்பாளிகளை நாம் உருவாக்க வேண்டும். படைப்பாளிகள், சரியை சரி என்றும் தவறை தவறென்றும் எதற்கும் அஞ்சாமல் சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழ்த் திரைத்துறையில் தமிழ் உணர்வுடன் செயல்படுபவர்கள் மிகவும் குறைவு. அதற்கு இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் அந்த முன்னோடிகளில் ஒருவர். இயக்குநர் வி.சேகர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, திரைத்துறையிலுள்ள உணர்வாளர்களுக்கும், தமிழ்த் தேசிய இன அமைப்புகளுக்கும் ஓர் உறுதியான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். அதுவே இன விடுதலைக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் பயன்படும்.

இயக்குநர் மணிவண்ணன் அவர்களது இழப்பு தமிழ்த் திரைத்துறைக்கு மட்டுமின்றி, தமிழ்த் தேசியத்திற்கும் பேரிழப்பாகும். அவருக்கு மீண்டும் எனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார். நிறைவில், கவிஞர் கவிபாஸ்கர் நன்றி கூறினார். இந்நிகழ்வில், திரளான தமிழ் உணர்வாளர்களும், திரைத்துறையினரும் கலந்து கொண்டனர்.

 (செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : சரவணன்)