Tuesday, October 21, 2014

எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் மறைவு – தமிழ் படைப்பிலக்கியத்திற்கு பேரிழப்பு


எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் மறைவு –
தமிழ் படைப்பிலக்கியத்திற்கு பேரிழப்பு

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ் படைப்பிலக்கியத்தில் அண்மைகால வரலாற்றில் தனித்த முத்திரை பதித்த மிகச்சிறந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள். களஆய்வு செய்து தொடர்புடைய அந்த அனுபவங்களை தன்னுடைய நாவல்களில் உயிரோட்டமாக பதிவு செய்தவர்.

உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர் பிரச்சனைகளை களஆய்வுசெய்து இவர் எழுதிய கரிப்பு மணிகள் மற்றும் அலை வாய்க்கரை என்ற நாவலும் பீகார் கொள்ளைக் கூட்டத்தினரின் பிரச்சனைகள் தொடர்பாக எழுதுவதற்கு அங்கு சென்று கொள்ளைக் கூட்டத் தலைவர் டாகுமான்சிங் மற்றும் பலரை சந்தித்து இவர் எழுதிய முள்ளும் மலரும் நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள்.

வேருக்கு நீர், குறிஞ்சித் தேன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாவல்களும் சிறுகதைகளும் எழுதியவர். காலம்தோறும் பெண்மை, யாதுமாகி நின்றாய், இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை போன்ற பெண்ணுரிமை சார்ந்த நூல்கள் எழுதியவர். மண்ணகத்துப் பூந்துளிர்கள் என்ற நாவலில் குழந்தைத் தொழிலாளர்களின் அவலங்களை பதிவு செய்துள்ளார். சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்கள் பற்றியும் பதிவு செய்துள்ளார். விடுதலைப் போராட்ட காலத்திலும் அதற்கு பிறகும் காந்தியத்தை பின்பற்றியவர்கள் அதற்கு மாறாக நடந்து கொண்ட வரலாறே வேருக்கு நீர் என்ற நாவல். காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவில் வெளிவந்த அந்த நாவலுக்கு 1973இல் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
வீடு என்ற நாவலில் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார். இறந்தவர்களுடைய நூல்கள் தான் அரசுடைமையாக்கப்படும் என்ற விதியிலிருந்து விலகி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் உடல் நலிவுற்ற நிலை காரணமாக அவருடைய படைப்புகள் 2009இல் அரசுடைமை ஆக்கப்பட்டன.

சமகாலத்தில் படைப்பிலக்கிய துறையில் தமிழ் மொழியை வளப்படுத்திய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் படைப்பிலக்கியத்தில் மட்டுமல்லாது பெண்ணுரிமை, சனநாயகத்திற்கான களப்போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்ட அவரின் மறைவுக்கு தமிழ் கலை இலக்கியப் பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 

உதயன்
(தலைவர், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை)

Friday, October 17, 2014

திருச்சியில் நாளை (18.10.2014) “வேர்கள் மண் பிடிக்கும்” - நூல் வெளியீட்டு விழா!


நாளை(17.10.2014) திருச்சியில்...
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில்
“வேர்கள் மண் பிடிக்கும்” 
கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா!

நாளை (18.10.2014) மாலை, திருச்சியில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசா ரகுநாதன் இயற்றியவேர்கள் மண் பிடிக்கும்” - கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா நடைபெறுகின்றது

நாளை மாலை 5.30 மணியளவில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள இரவி சிற்றரங்கில் (கலைஞர் அறிவாலயம் அருகில்) நடைபெறும் இந்நிகழ்வுக்கு, பாவலர் மூ..கவித்துவன் தலைமையேற்கிறார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் . ஆனந்தன் வரவேற்புரையாற்றகிறார்

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், நூலை வெளியிட்டு, 'படைப்பில் அறம் செய்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். இலக்கியத் திறனாய்வாளர் திரு. வீ..சோமசுந்தரம், திருக்குறள் திரு. சு.முருகானந்தம், புலவர் தமிழாளன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் தோழர் நா.வைகறை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்

பாவலர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அவர்கள் நூல் மதிப்புரை வழங்குகிறார். தோழர் பி.இரெ.அரசெழிலன் நூலைப் பெற்றுக் கொள்கிறார். நூல் ஆக்கத்திற்குத் துணை நின்ற தோழர்கள் தி.மா.சரவணன், பாவலர் கவிபாஸ்கர் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்படுகின்றது

நிறைவில், நூலாசிரியர் பாவலர் நா.இராசாரகுநாதன் ஏற்புரை வழங்குகிறார். தோழர் இனியன் நன்றியுரையாற்றுகிறார்

இந்நிகழ்வு, கண்ணோட்டம் இணைய இதழ் (www.kannotam.com) இணையதளத்தில், நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

இந்நிகழ்வில், திருச்சி வாழ் தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்

தொடர்புக்கு: 9443975784


===============================
செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.
===============================

Sunday, September 7, 2014

திருச்சியில் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி. நினைவேந்தல் கூட்டம்!




தமிழ் மாமன்னர்களின் காலத்திற்குப் பின்னால் பல்வேறு படையெடுப்புகளினால் தமிழினம் தனது வாழ்வையும் மண்ணையும் இழந்தது. நீலக்கடல் வெளியில் நீண்டு பாய் விரித்துப் பயணித்த தமிழனின் கலங்கள் காணமல் போயின. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அமைதியுற்றிருந்த கடல்வெளி வீரத்தமிழன் திரு வ.உ.சிதம்பரத்தினால் வீறுபெற்றது. வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வணிக மேலாண்மையை நொறுக்க எவரும் முன் தோன்றா நிலையில் பெருங்கடல்பரப்பில் பெருமிதத்தோடு நாவாய் செலுத்தியவர் நம் தமிழ்த் தலைவர் திரு வ.உ.சி.அவர்கள். ஆனால் இந்திய வரலாறு உரிய ஏற்பிசைவை திரு வ.உ.சி அவர்களுக்கு வழங்கவில்லை. 

எனவே, வ.உ.சி. அவர்கள் நினைவேந்தி நெஞ்சில் நிறுத்தும் வகையில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், வரும் 13.09.14 காரி(சனி)க்கிழமை அன்று மாலை  திங்கள் கூட்டம் நடைபெறுகின்றது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் ஓட்டல் அருண்- சிற்றரங்கில், மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, த.க.இ.பே. துணைச் செயலாளர் பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி தலைமையேற்கிறார். 

கூட்டத்தில், “கப்பலோட்டியத் தமிழன்” என்ற தலைப்பில் செல்வன் கி.பா.மாரியப்பா மற்றும் செல்வன் ப.இரா.கதிரவன் ஆகியோர் உரையாற்ற, அதே தலைப்பில் செல்வி லெ.அருந்தமிழ் பாவீச்சு நிகழ்த்துகின்றனர். "கப்பல் ஓட்டிய தமிழனும் களவுப் போகும் தமிழகமும்" என்ற தலைப்பில் பொறியாளர் ப.மாதேவன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில், திருச்சி வாழ் தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தொடர்புக்கு: தோழர் இராசாஇரகுநாதன், 9443532268


Sunday, February 9, 2014

திருச்சியில் த.க.இ.பே. சார்பில் ஆவணப்படத் திரையிடல் நிகழ்வு!


திருச்சியில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், 'பேசாமொழி' ஆவணப்படத் திரையில் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் திங்களன்று த.க.இ.பே. சார்பில் நடைபெற்று வரும் திங்கள் கூட்டம் வரும் 15.02.2014 காரி (சனி)க்கிழமையன்று மாலை 6 மணியளவில், திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருண் ஹோட்டல் சிற்றங்கில் நடைபெறுகின்றது. 

கூட்டத்திற்கு, இதழாளர் திரு. தி.மா.சரவணன் தலைமையேற்கிறார். பொறியாளர் து.இரவி, தமிழ்த் திரையுலகின் 100 ஆண்டு காலப் போக்குகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். 

முன்னதாக, இந்தியத் திரையுலகிற்கு முன்னோடியாக தமிழகத்தில், மவுனத் துண்டுப் படங்களை திரையிட்டுக் காட்டிய தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட் அவர்களது வாழ்க்கையையும், தமிழ் மவுனத் திரைப்படங்களில் வரலாற்றையும் எடுத்துரைக்கும் வகையில், 'பாலை' திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் அவர்கள் இயக்கத்தில் வெளியான "பேசாமொழி" ஆவணப்படம் திரையிட்டுக் காட்டப்படுகின்றது. 

தொடர்புக்கு: 9842446044, 9443532268


Monday, January 20, 2014

திருச்சியில் அய்யா நம்மாழ்வார் படத்திறப்பு – தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் வெளியீடு!

“அய்யா நம்மாழ்வார் படத்திறப்பு – தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் வெளியீடு
திருச்சியில் த.க.இ.பே. சார்பில் நடைபெற்ற திங்கள் கூட்டம்!




திருச்சியில், 18.01.2014 காரி(சனி)யன்று தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற “இலக்கியக் கூடல்“ கூட்டத்தில், இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. கோ.நம்மாழ்வார் அவர்களது படத்திறப்பும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் வெளியீட்டு நிகழ்வும் சிறப்புற நடைபெற்றன.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருண் ஹோட்டல் சிற்றரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அருட்தந்தை மனுவேல் (தமிழ்க் கலை இலக்கியப் பேரவை) தலைமையேற்று உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத்தில், இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. கோ.நம்மாழ்வார் மற்றும் சிறந்த தமிழின உணர்வாளரும், நம் குறள்இதழாசிரியருமான பெரம்பலூர் பாவலர் ஆடல் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. கோ.நம்மாழ்வார் அவர்களது படத்தைத் திறந்து வைத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி ஆகியோர் உரையாற்றினர். பாவலர் ஆடல் குறித்து முனைவர் கு.திருமாறன் குறிப்புரையாற்றினார்.
தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2045(2014) - பொங்கல் மலரை பேரவைத் தலைவர் தோழர் ரெ.சு.மணி வெளியிட, இலக்கிய விமர்சகர் திரு. வீ.ந.சோ. அவர்கள் பெற்றுக் கொண்டார்.


நிறைவில், தமிழ்ப் பழமொழிகள் காட்டும் தமிழர் வாழ்வியல் என்ற தலைப்பில் பாவாணர் தமிழியக்க அமைப்பாளர் முனைவர் தமிழகன் சிறப்புரையாற்றினார். நிகழ்வை, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் கவிஞர் ந.இராசாஇரகுநாதன், தோழர் தி.மா.சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.


இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.