Tuesday, June 25, 2013

த.க.இ.பே. சார்பில் இயக்குநர் மணிவண்ணன் நினைவேந்தல் கூட்டம்!



தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்தும்
இயக்குநர் மணிவண்ணன் நினைவேந்தல்

மார்க்சியபெரியாரிய சிந்னையாளர்தமிழீழ விடுதலை ஆதரவாளர்தமிழ்த் தேசியப் பற்றாளர்என பல தளங்களில் இயங்கிய, இயக்குநர் மணிவண்ணன் கடந்த 15.6.2013 அன்று திடீர் மரணம் அடைந்தது, தமிழ்த் திரையுலகினருக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இயக்குநராக, நடிகராக, திரைக்கதை எழுத்தாளராக, மிளிர்ந்த தோழர் மணிவண்ணன் கலைநேர்த்தியோடு, சமூகக்கருத்துகளையும், அரசியல் கருத்துகளையும் மக்களுக்கு வழங்கியவர்.

மார்க்சியம், பெரியார் சிந்தனைகள், ஆகியவற்றில் ஊன்றிநின்று தமிழ்த் தேசிய உணர்வாளராக  வளர்ச்சியடைந்தவர் தோழர் மணிவண்ணன். ஈழத்தமிழர் சிக்கலில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் பலவற்றில் நேரடியாகப் பங்கேற்று அப் போராட்டங்களுக்கு வலு சேர்த்தவர். இடைவிடாத, வேகமான படிப்பாளி.

இயக்குநர் தோழர் மணிவண்ணன் திடீர் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும். இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழ்க்கலை இலக்கியப் பேரவை சார்பில் வருகிற 29.6.2013 காரி(சனி)க் கிழமை, மாலை 5.00 மணியளவில் சென்னை, வடபழனி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க (கமலா திரையரங்கம் அருகில்) அரங்கத்தில் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

இவ்விழாவிற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையேற்கிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் படத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார். இயக்குநர் வெ. சேகர், ஓவியர், புகழேந்தி, இயக்குநர் வ. கெளதமன், இயக்குநர் ம. செந்தமிழன், இயக்குநர் இகோர் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்துகின்றனர். தோழர் உதயன் வரவேற்புரையாற்ற, கவிஞர் கவிபாஸ்கர் ஒருங்கிணைக்கிறார்.

இவ்விழாவிற்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள்,  தமிழ்த் தேசிய உணர்வாளர்கள்,  பத்திரிகையாளர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றோம்.

இவண், 
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை,
தொடர்புக்கு: 9841604017