Sunday, September 7, 2014

திருச்சியில் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி. நினைவேந்தல் கூட்டம்!




தமிழ் மாமன்னர்களின் காலத்திற்குப் பின்னால் பல்வேறு படையெடுப்புகளினால் தமிழினம் தனது வாழ்வையும் மண்ணையும் இழந்தது. நீலக்கடல் வெளியில் நீண்டு பாய் விரித்துப் பயணித்த தமிழனின் கலங்கள் காணமல் போயின. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அமைதியுற்றிருந்த கடல்வெளி வீரத்தமிழன் திரு வ.உ.சிதம்பரத்தினால் வீறுபெற்றது. வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வணிக மேலாண்மையை நொறுக்க எவரும் முன் தோன்றா நிலையில் பெருங்கடல்பரப்பில் பெருமிதத்தோடு நாவாய் செலுத்தியவர் நம் தமிழ்த் தலைவர் திரு வ.உ.சி.அவர்கள். ஆனால் இந்திய வரலாறு உரிய ஏற்பிசைவை திரு வ.உ.சி அவர்களுக்கு வழங்கவில்லை. 

எனவே, வ.உ.சி. அவர்கள் நினைவேந்தி நெஞ்சில் நிறுத்தும் வகையில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், வரும் 13.09.14 காரி(சனி)க்கிழமை அன்று மாலை  திங்கள் கூட்டம் நடைபெறுகின்றது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் ஓட்டல் அருண்- சிற்றரங்கில், மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, த.க.இ.பே. துணைச் செயலாளர் பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி தலைமையேற்கிறார். 

கூட்டத்தில், “கப்பலோட்டியத் தமிழன்” என்ற தலைப்பில் செல்வன் கி.பா.மாரியப்பா மற்றும் செல்வன் ப.இரா.கதிரவன் ஆகியோர் உரையாற்ற, அதே தலைப்பில் செல்வி லெ.அருந்தமிழ் பாவீச்சு நிகழ்த்துகின்றனர். "கப்பல் ஓட்டிய தமிழனும் களவுப் போகும் தமிழகமும்" என்ற தலைப்பில் பொறியாளர் ப.மாதேவன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில், திருச்சி வாழ் தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தொடர்புக்கு: தோழர் இராசாஇரகுநாதன், 9443532268