“அய்யா நம்மாழ்வார் படத்திறப்பு – தமிழர் கண்ணோட்டம் பொங்கல்
மலர் வெளியீடு”
திருச்சியில் த.க.இ.பே. சார்பில் நடைபெற்ற
திங்கள் கூட்டம்!
திருச்சியில், 18.01.2014 காரி(சனி)யன்று தமிழ்க்
கலை இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற “இலக்கியக் கூடல்“ கூட்டத்தில், இயற்கை
வேளாண் அறிவியலாளர் திரு. கோ.நம்மாழ்வார் அவர்களது படத்திறப்பும், தமிழ்த் தேசியத்
தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் வெளியீட்டு நிகழ்வும் சிறப்புற நடைபெற்றன.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருண்
ஹோட்டல் சிற்றரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அருட்தந்தை மனுவேல் (தமிழ்க் கலை
இலக்கியப் பேரவை) தலைமையேற்று உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத்தில், இயற்கை
வேளாண் அறிவியலாளர் திரு. கோ.நம்மாழ்வார் மற்றும் சிறந்த தமிழின உணர்வாளரும், “நம் குறள்” இதழாசிரியருமான
பெரம்பலூர் பாவலர் ஆடல் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு.
கோ.நம்மாழ்வார் அவர்களது படத்தைத் திறந்து வைத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி ஆகியோர்
உரையாற்றினர். பாவலர் ஆடல் குறித்து முனைவர் கு.திருமாறன் குறிப்புரையாற்றினார்.
தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர்
கண்ணோட்டம் 2045(2014) - பொங்கல் மலரை பேரவைத் தலைவர் தோழர் ரெ.சு.மணி வெளியிட,
இலக்கிய விமர்சகர் திரு. வீ.ந.சோ. அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நிறைவில், “தமிழ்ப் பழமொழிகள் காட்டும் தமிழர் வாழ்வியல்” என்ற தலைப்பில் பாவாணர் தமிழியக்க
அமைப்பாளர் முனைவர் தமிழகன் சிறப்புரையாற்றினார். நிகழ்வை, தமிழ்க் கலை இலக்கியப்
பேரவை நடுவண் குழு உறுப்பினர் கவிஞர் ந.இராசாஇரகுநாதன், தோழர் தி.மா.சரவணன்
ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், கலை
இலக்கிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment