Saturday, December 29, 2012

“ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு!


ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு!

ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்என, சென்னையில் நடைபெற்ற ஓவியர் புகழேந்தி நூல் மற்றும் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

தமிழீழ விடுதலைதமிழர் உரிமைப் போராட்டங்களின் ஆதரவாளரான ஓவியர் புகழேந்தி அவர்களது நூல் மற்றும் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு நேற்று(29.12.2012) மாலை, சென்னை வடபழனியிலுள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.

ஓவியர் புகழேந்தி அவர்களது படைப்புகள் குறித்து, தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகஆணிவேர்என்ற திரைப்படத்தை இயக்கியவரும், தமிழ்த் திரை இயக்குநர் மகேந்திரன் அவர்களது மகனுமான திரு. ஜான் அவர்கள் இயக்கத்தில், ‘எரியும் வண்ணங்கள்என்ற தலைப்பிலான ஆவணப்படமும், ஓவியர் புகழேந்தி அவர்களால் எழுதப்பட்ட புகழ் பெற்ற ஓவியர் எம்.எப்.உசேன் அவர்களது வாழ்க்கையை விவரிக்கும்எம்.எஃப்.உசேன்; சமகால இந்திய ஓவியக் கலையின் முன்னோடிஎன்ற நூலும், ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் மீதான பார்வையாளர் கருத்துகள் தொகுக்கப்பட்டு, ‘வண்ணங்கள் மீதான வார்த்தைகள்என்ற தலைப்பிலான நூலாகவும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.

விழாவிற்கு வந்தோரை, நிழல் இதழாசிரியர் திரு ப.தி.அரசு வரவேற்று உரையாற்றினார். ‘பாலைஇயக்குநர் .செந்தமிழின், ஓவியர் புகழேந்தியின் படைப்புகள் குறித்தும், வெளியிடப்பட்ட நூல் மற்றும் ஆவணப்படம் குறித்தும் அறிமுகவுரையாற்றி, நிகழ்வை நெறிப்படுத்தினார்.


'எரியும் வண்ணங்கள்' ஆவணப்படத்தை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெளியிட, ஆவணப்பட இயக்குநர் அருள்மொழி பெற்றுக்கொண்டார். எம்.எப்.உசேன் நூலை ஓவியர் மருது வெளியிட இயக்குநர் மகேந்திரன் பெற்றுக் கொண்டார். 'வண்ணங்கள் மீதான வார்த்தைகள்நூலை, கவிக்கோ அப்துல் இரகுமான் வெளியிட வெளியிட தொழில் முனைவர் திரு. ஸ்ரீகாந்த் மீனாட்சி பெற்றுக் கொண்டார்

கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் பத்மவதி விவேகானந்தன் ஆகியோர் கருத்துரை வழங்க, ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்தினார்.

வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும், சால்வை அணிவித்து சிறப்பு செய்து, தலைமையுரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “ஓவியர் புகழேந்தியின் படைப்புகள் குறித்து பேசுகின்ற ஆவணப்படமும், அவரது   நூலும் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. ஓரு நல்ல தமிழ்த் தேசியராக நம்முன் விளங்கும் ஓவியர் புகழேந்தியின், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான ஓவியங்களை நாங்கள் தஞ்சையில் பெரிய கோயில் அருகில் ஒருமுறைக் காட்சிக்கு வைத்த போது, ஈழப்போராட்டம் குறித்து பொது மக்கள் பலரை அது ஈர்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அதைப் பார்த்துச் சென்றனர்.

பல நல்ல ஓவியங்களை நான் மிகவும் மதிப்பதற்கானக் காரணம், அதை புரிந்து கொள்ள முடிவதால் அல்ல. என்னால் அதை புரிந்து கொள்ள முடியாததால் தான் நான் அப்படி சொல்கிறேன். அதற்காக, ஓவியங்களை புரியும்படி வரையுங்கள் என நாம் படைப்பாளிகளுக்கு வேண்டுகோள் விடுக்கக் கூடாது. ஓவியங்களைப் புரிந்து கொள்ள நாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது, ஓவியத்திற்கென ஒரு ஆசிரியர் இருப்பார். ஓவியங்கள் குறித்துப் பேசுவார். இன்றைக்கெல்லாம், அவை அரிதாகிவிட்டன. நமது மெய் அறிவிலிருந்து, நடைமுறை அனுபவத்திலிருந்து நாம் ஓவியங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு நாம் பார்க்கிற பாரத மாதா ஓவியத்திலிருக்கும் பாரத மாதாவை, 2009 முள்ளிவாய்க்கால் போரில் நம் தமிழ்ச் சொந்தங்களை இலட்சம் இலட்சமாகக் காவு வாங்கிய இரத்தக் காட்டேரியாகத் தான் பார்க்கிறேன். அதற்கு முன் அப்படித் தெரியவில்லை. 2009 தமிழின அழிப்புப் போரில் மட்டுமா, 1965இல் இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்தும், நஞ்சுண்டும் மாண்டத் தமிழர்கள், துப்பாக்கிச் சூட்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் இராசேந்திரன் தொடங்கி 300 பேர் வரை கொல்லப்பட்டார்களே, அது பாரத மாதா வாங்கிய பலி தானே. 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஒரு சுண்டக்காய் நாட்டுக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, அது பாரத மாதா வாங்கிய இரத்தக்காவு தானே. இப்படி, தமிழர்களின் நரமாமிசம் தின்னும் இரத்தக்காட்டேரியாகத் தான் பாரத மாதாவின் ஓவியம் எனக்குத் தோன்றுகிறது. அந்த ஓவியம் பொதுப் பார்வையில் அழகாகத்தான் வரையப்பட்டிருக்கிறது. இப்படித்தான் நாம் ஓவியங்களை, நம்முடைய அனுபவத்தில் உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்.

எமது இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில்நாடாளுமன்றத்தில் நரிகள் ஊளைஎன இந்திய நாடாளுமன்றத்தின் நிலை குறித்து, இவ்வாறுத் தலைப்பிட்டு எழுதினோம். அதை கருத்தை, வலியுறுத்தும் விதமாக, இந்திய நாடாளுமன்றம் கழிவறைக் கூடம் போல காட்சியளிக்கும் விதமாகவும், இந்திய அரசின் மூன்று சிங்க சின்னத்தில், சிங்கத்திற்கு பதில் நரிகள் இருப்பதைப் போலவும் மும்பையில்  ஓவியர் ஒருவர் ஓவியம் வரைந்தார். அதற்காக அவரை சிறையிலடைத்தார்கள். பல கட்டுரைகள் சொல்லும் செய்தியை, ஒரு ஓவியம் காட்சிப்படுத்தியது, அதனால் அது அரசுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. மக்களிடத்தில் அந்த ஓவியமும் சென்றடைந்தது. இவ்வாறு, ஓவியங்கள் உள்ளிட்ட கலை இலக்கியப் படைப்புகளை நாம் நமது சொந்த அனுபவத்திலிருந்துப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஓவியர் புகழேந்தி, ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, ஆந்திராவில் ஒடுக்கப்பட்ட மக்கள் சுண்டுரில், சாதி வெறியர்களால் கொல்லப்பட்டக் கொடுமையை எதிர்த்து ஓவியம் தீட்டியுள்ளார். குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் பலியான போது, மனம் வருந்தி ஓவியம் தீட்டினார். இவ்வாறு பரந்த மனப்பான்மையுடன் அவர் ஓவியங்கள் தீட்டியுள்ளது பாராட்டத்தக்கது. ஓவியர் புகழேந்தியின் இந்த பண்பும், மரபும், நம் இனத்தின் தொடர்ச்சியாக வருவது தான்.

தமிழ் தான் உலகின் முதன்மொழி என பாவாணர் கூறியபோது, பலரும் அதை தற்பெருமைக்காக சொல்கிறார் எனக் கூறினார்கள். ஆனால், இன்றைக்கு இவை உண்மையாகும் விதத்தில் பல சான்றுகள் கிடைத்துக் கொண்டுள்ளன. சில நாட்களுக்கு முன் உலகம் அழியும் என வதந்தி ஏற்பட்டதே, அதன் மூலவர்களான மாயர்கள் குறித்து இங்கு உலகெங்கும் பேசப்படுகிறது. அவர்களது கட்டடிக்கலை, ஓவியம், சிற்பங்கள் குறித்தெல்லாம் பல ஆய்வுகள் வருகின்றன. அவர்கள் தமிழர்களே என பல மேற்கத்திய ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். நம்முடைய சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளே, ஓவிய வடிவிலான சித்திர எழுத்துகள் தானே.

இவ்வாறு ஓவியங்களுடன் தமிழினத்திற்கெனத் தொடரும் மரபு வளர்ச்சிதான் ஓவியர் புகழேந்தி அவர்கள் மூலமும் தொடர்கின்றது. எங்கே பாதிப்பு நேர்ந்தாலும் இங்கே நம் ஓவியர் புகழேந்தி துடிப்பது போல, வடநாட்டில் யாராவது நமக்காகத் துடித்தார்களா? தமிழினம் ஈழத்தில் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போதும், நமது மீனவர்கள் கொல்லபட்ட போதும் அதை வடநாட்டில் யாராவது படைப்புகளாக்கியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. படைப்பாளிகளை விடுங்கள். வடநாட்டு அரசியல்வாதிகள் யாராவது கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தீர்மானமாவது போட்டார்களா? நாம் மட்டும்யாதும் ஊரே யாவரும் கேளிர்என பரந்த மனப்பான்மையுடன் இருப்பதில் தவறில்லை என்றாலும், நாம் ஏமாளிகளாகிவிடக் கூடாது என்பதை மட்டும் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்என பேசினார்.


இந்நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வார்களும் பங்கேற்றனர்.













(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள்: அருணபாரதி)

Sunday, July 8, 2012

இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - நா.வைகறை பேச்சு!


“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” -  நா.வைகறை பேச்சு


“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என கலை இலக்கியத் திறனாய்வாளரும், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளருமான தோழர் நா.வைகறை பேசினார். 

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.

இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் கடந்த 07.07.2012 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் இரண்டாம் மாடியில் நடைபெற்றது. 

தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமையேற்றார். த.க.இ.பே. செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர், திரு இராமச்சந்திரன்(அனு ஃபைன் ஆர்ட்ஸ்), ஆகியோர் நூற்படி பெற்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 

அப்போது, தனது தலைமையுரையில் தோழர் நா.வைகறை பேசியதாவது:

"முள்ளிவாய்க்கால் சோகம் தமிழினத்தின் தீராத காயம். தமிழீழ மக்களை அழித்தொழிக்க உதவிய இந்திய அரசு நம் இனத்தின் பகை அரசு. எனவே, இந்தியத்தை நாம் புரிந்து கொள்ளாத வரை தமிழீழ விடுதலையைப் பெற முடியாது. இத்தனை நடந்த பின்னரும் இந்தியாவை நாம் ஏன் நம்பவேண்டும்? இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை.தமிழீழ விடுதலைக்கு முன்பே, தமிழ்நாட்டு விடுதலையை நாம் அடைந்து விடுவோம் என்று எண்ணுகிற அளவிற்கு இந்திய அரசு தன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி என தொடர்ந்து தமிழகத்திற்கு ஆற்று நீர் உரிமை மறுக்கப்படுவது, நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்காமை என தொடர்ந்து இந்திய அரசின் கோர முகம் தமிழகத்தில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, உலகத் தமிழர்கள் தமிழர்களுக்கு ஒரு நாடு என்றல்ல, தமிழீழம் - தனித்தமிழ்நாடு ஆகிய இரண்டு நாடுகளும் வேண்டும் என அணிதிரள வேண்டும்" என்று தோழர் நா.வைகறை பேசினார். 

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பேசிய போது, இந்திய அரசு தமிழீழத்தை அழிக்க என்னென்ன வகையில் உதவியிருக்கிறது என்பதை பட்டியலிடும் இந்நூலின் பக்கங்களைச் சுட்டிக் காட்டினார். இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் நூலின் சிறப்புகளை விளக்கிப் பேசினர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்நூல் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் படைக்கருவியாக விளங்குவதாகவும், நூலாசிரியர் பேரா. த.செயராமன் இது போன்ற பல படைக்கருவிகளை தமிழீழ விடுதலைக்கு உருவாக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

நூலாசிரியர் முனைவர் த.செயராமன் ஏற்புரை வழங்ய போது, ஈழத் தமிழர் இனப்படுகொலையில் சிங்களப் பேரினவாதிகள் மட்டும் குற்றவாளிகள் அல்ல; அப்படுகொலைக்குத் துணை நின்ற, நிற்கின்ற இந்திய தேசியவாதிகளும் குற்றவாளிகள்தாம். தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கும் எவரும் அறிந்து கொள்ள வேண்டியது ‘இந்தியம்’ என்பது தமிழக்கும், தமிழருக்கும் எதிர்க்கருத்தியல், அது தமிழ் தேசிய இனத்துக்கும் பகைசக்தி. இந்தியத்தை எதிர்க்காமல் ஈழத்தைப் பெறமுடியாது. என பேசினார். 

கவிஞர் முழுநிலவன நன்றி நவின்றார். இக்கூட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டு இந்நூலை வாங்கிச் சென்றனர். 

(செய்தி - த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள்:கோபிநாத்)